Friday, March 8, 2024

உன்னைப்போல் செல்வனை நான்...

 



காற்றொரு பாட்டுப் பாட
 ககனமே விளக்கம் ஏந்த
 ஊற்றென நிலவின் சாறு
 உள்ளொளி பொங்கிப் பாய
 நூற்றிலோர் பூவைப் போல
 நுவலரும் முகத்தைக் காட்டி
ஆற்றல்சால் மைந்தன் தன்னை
அணைத்திருந்தனளே அன்னை! 

துல்லிய பட்டுப் போன்ற 
தூயவள் மரியாள் கையில் 
மெல்லிய பாலன் இயேசு 
விளக்கெனப் புன்னகைத்தான்
நல்லவர் உள்ளம் போல 
நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாதவாறு 
இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும்
மாணிக்கத் தொட்டில் தோற்கும்
 தூளி இல்லாத போதும் 
தூங்கினான் பாலன் இயேசு
 "வாழிய!" என்றார் தூதர் 
வணங்கியே நின்றார் ஆயர்! 
நாழிகை செல்லச் செல்ல 
நல்லொளி மேலும் பல்கும்!  

சோதிமணிப் பெட்டகமே 
சுடரொளியே யூதருக்கு
ஆதிமகனாய்ப் பிறந்த
அருந்தவமே தாலேலோ!

வானளந்த திருக்குமரா! 
மனிதகுல மருத்துவனே! 
தேனமுதத் திருவாயில்
சித்திரங்கள் தீட்ட வந்தாய்!

பல்லாண்டு பல்லாண்டு
பாலைவனம் போலிருந்து 
எல்லாமும் இழந்து வரும்
இஸ்ரேலை வாழ வைப்பாய்!

அந்நாளில் நூலோர்கள்
ஆன்றோர்கள் பெரியோர்கள் 
சொன்னபடி மீட்பதற்குத்
தோன்றி வந்தாய் தாலேலோ!

மாளிகையும் இல்லைகாண்
மஞ்சமில்லை என்றாலும்
ஏழைத் தொழுவில் வந்த
இறைமகனே தாலேலோ! 

இன்னின்ன காலமெல்லாம்
இவ்வாறு நடக்குமென
சொன்ன இறை வாக்கினர்க்குத்
தொடர்பான உதாரணமே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும்
தாயொருத்தி கன்னியென்றும் 
இச்சனங்கள் சொன்னாலும்
இறைவனது திருக்குமரா!

மாரியிலே மழை பொழிந்து
மக்களினம் வாழ வைக்கும் 
காரியம் போல் உன் தந்தை
காலத்தே அனுப்பி வைத்தார்

உன்னைப் போல் செல்வனை நான்
உலகெங்கும் கண்டதில்லை 
என்னைப்போல் ஏழையை நீ
எங்கேனும் கண்டதுண்டா?

போட்ட விதைமுளைக்கும்
பொன்னான பூமியிலே 
வாட்டமில்லாப் பயிராக
வந்து விளைந்தவனே!

நல்ல குறிகளெல்லாம்
நான் பார்க்கத் தோணுதையா
வல்லவராம் உன் தந்தை
மனதிலென்ன வைத்தாரோ!

காட்டுவழி போனாலும்
கள்ளர் பயம் ஆனாலும் 
கூட்டம் உனைத் தொடரும்
கோமகனே தாலேலோ!

ஆகாயப் பந்தலிலே
ஆயிரம் பேர் சுற்றி வந்து 
வாகான சீரளித்த
வரமே மணிமகனே!

மாணிக்கத் தொட்டிலுக்கு
வாய்க்காத பெருமையெல்லாம் 
ஆநிரைத் தொழுவினுக்கு
ஆரளித்தார் எங்கோவே!

எவ்விடத்தில் பிறந்தாலும்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
செவ்வானத் திருக்குமரன்
தேசமெல்லாம் புகழ்பெறுவான்  

நம்பிக்கை விசுவாசம்
நான் வைத்து இருப்பது போல் 
நம்பி உனைத் தொடர்வோர்
நாளெலாம் பெருகுவரே!

அன்பில் பிறந்தவனே
அருமைத் திருமகனே! 
என் வீட்டுப் பேரொளியை
ஏற்ற வந்த திருவிளக்கே!

இன்பத் திருநாளே
இஸ்ரயேலில் வரும் வரைக்கும் 
கண்மூடித் தூங்கிடுவாய்
காலமுந்தன் கையினிலே!  

#இயேசு காவியம்
#கவியரசு கண்ணதாசன் 
 

Monday, March 4, 2024

எனக்காகப் பிறந்தவளை...

 



எனக்காகப் பிறந்தவளை

கண்டு பிடித்தேன்.

அவள் கண்ணசைவில்

ஒருகோடி கவிதை படித்தேன்.


என் பாதி எங்கே என்று

தேடி அலைந்தேன்.

அவளைப் பார்த்த பின்புதான்

நான் முழுமை அடைந்தேன்.

ஈருயிர் ஒன்றாய் - இனி 

அவள்தான் என் தாய்.


வேப்பம்பூ உதிர்கின்ற

என் வீட்டு முற்றம் - அவள் 

போடும் கோலத்தால்

அழகாய் மாறும்.


விண்மீன்கள் வந்து போகும்

மொட்டைமாடி - அவள்

கொலுசின் ஓசையினால்

சொர்க்கம் ஆகும்.


காற்று வந்து கதை பேசும்

கொடிக்கயிற்றில் - அவள்

புடவை அன்றாடம்

கூட்டம் போடும்.


காத்திருப்பாள் ஒருத்தி

என்ற நினைவு வந்து,

மனம் கடிகார முள்மீது

ஆட்டம் போடும்.


பாதரசம் உதிர்கின்ற

கண்ணாடி மேல்,

புதிதாக பொட்டு வந்து

ஒட்டிக் கொள்ளும்.


பழைய ரசம் - அவள் 

கையால் பறிமாறினால்,

பழரசமாய் இனிக்கிறதென

பொய்கள் சொல்லும்.


பூக்கடைக்குப் போகாத

கால்கள் இரண்டும்

புதுப்பழக்கம் பார் - என்று

திட்டிச் செல்லும்.


ஆண்களுக்கும் வெட்கம்

வரும் தருணம் உண்டு - என்று

ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்.


#நா.முத்துக்குமார் 


Sunday, March 3, 2024

அணையா விளக்காட்டம்...

 


அணையா விளக்காட்டம்

அழகே நீ விழிச்சிருக்க,

துணையா தாயிருக்கா

தொந்தரவு வெளங்காம...


மேக இமை மூடியதால்

மேல் நிலவு தூங்கிருச்சு,

மோகமெனை வாட்டுதடி

மோகனமே தூங்காயோ...


உன் பசியை தீர்த்துக்கிட்டு

உறங்காம நீயிருந்தா,

என் பசிக்கு விருந்தேது

என்ன சொல்லி வருந்துவது...


கண்ணுறங்கு கண்மணியே

காலையிலே வெள்ளி வரும்,

இன்னும் நீ விழிச்சிருந்தா

இரவுக்கே கோபம் வரும்...


செல்லக்கிளி நீயுறங்கி

செண்பகத்த அனுப்பி வையி, 

உள்ளபடி சொன்னா

உனக்கு ஒரு சொந்தம் வரும்.


************************************


தவமாய் தவமிருந்து

தரை மெழுகி கோலமிட்டு

வரமாய் பெற்ற மவன்

வாளெடுத்து வாராயோ!


கரடி உறங்கும் வனம்

காட்டானை தூங்கும் வனம்

கண்ணே நீ கடப்பாயோ

காடெல்லாம் சாய்ப்பாயோ!


சூரிய நதியோரம்

சொர்க்கமின்னும் போகையில

சுருட்டிப் பிடித்திழுக்கும்

சோம்பேறி முதலைகளாம்! 


காடை கடக்கையில

கால் நோக நடக்கையில

கொத்தி விஷம் கொடுக்கும்

குணமில்லா வவ்வாலாம்!


மலை மேலே பசு மேய

மகிழம்பூ பாய் விரிக்க

மழை தங்கா பாறையிலே

மேல் உச்சி போவாயோ!


காக்கை விதை போட்டு

கால் பரப்பி வளர்ந்த மரம்

நீக்கி பார்ப்பாயோ

நீண்ட வழி காண்பாயோ!


கருவுக்குள் உரு போல 

கண் மூடித் தவழ்வாயோ

கட்டை விரல் நனைய

காலாலே நடப்பாயோ!


புத்தி சொன்ன மகன்

புடம் போட்ட தங்க மகன்

புவியெங்கும் புகழ் பாடும்

பொன்னான புத்தமகன்!


ரெட்டைக்குகை புரிந்து

றெக்கை அடிப்பாயோ

ராஜன் தலை சுமந்த

ரத்தினத்தை காண்பாயோ!


தவமாய் தவமிருந்து

தரை மெழுகி கோலமிட்டு

வரமாய் பெற்ற மவன்

வாளெடுத்து வாராயோ! 


*************************************


உளி பொளிந்து

சிதைப்பதால்தான்

சிற்பம் சிறக்கிறது.

இலையுதிர்த்த 

மரங்களில்தான்

வசந்தம் பிறக்கிறது.

இழந்து பெறும்

வாழ்க்கையிலும்

ஏதோ சுகமொன்று

 இருக்கிறது.


*************************************




நயனம் நிமிர்ந்து நீ

நோக்கிடும் திசைகளில்

பயணம் உன்னுடன்

பாதைகள் எங்கிலும்

என்றவன் சென்றபின்

என்னவோர் வாழ்வது? 


பாதையில் நடக்கையில்

பாதியில் மழைவர

நாதமாய் நடந்தவன்

நிழலென மறையலாம்.

சென்றதை நினைவினில்

தேக்கியே தவித்திடல்

என்னதான் பயன் தரும்

எடுத்தெறி இன்றுடன்.

என் குடை விரித்து நான்

எங்குமே துணைவர

என்னுடன் தொடங்கிடேன் 

இன்னுமோர் பயணமே! 



************************************

#இளவயதில் மாத நாவல்களில் வாசித்து மனதில் பதிந்து விட்ட வரிகள்.


Friday, March 1, 2024

ஆரோ! ஆரிரரோ!



ஆரோ!
ஆரிரரோ!
ஆரமுதே!
ஆராரோ!

உலக உருண்டைக்குள் -
உதிப்பாரும் உதிர்வாரும்
உனக்கிணையாய் ஆவாரோ? 
ஈச்சம் பழச்சாற்றை -
ஈரிதழில் ஈவாரோ?

ஊரார் 
உளமெல்லாம் - வேலின்
கூரார் விழியழகால் 
களவாடிப் போவாரோ?
உறுகண் 
உறுகண் கண்டால் -
உன்போல் 
உடன் வந்து காவாரோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

செயிர்கடைந்து கண்விழிகள் சிவப்பேறக் கனகனவன் -
உயிர் கடைந்து கோளரியாய் உறுமியவா! கேழ்வரகுப் - 
பயிர் கடைந்து குருவியெலாம் பசியாறும் கோகுலத்தில் - 
தயிர் கடைந்து பிழைக்கின்ற தனிக்குலத்தில் பிறந்தாயோ!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ! 

தருப்பை விரலிடுக்கித் 
தவ வேள்வி வேட்பதற்கு -
நெருப்பை வளர்ப்போரும்
நெடுநாளாய் உன்னுடைய
இருப்பைத் தேர்ந்தாலும்
இருப்பிடத்தைத் தேடுகையில் -
கருப்பை குடிபுகுந்து 
கவுரவத்தைக் கொடுத்தவனே!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ !

அழுக்கு நிலா என்றாலும்; 
அமுதத்தை எல்லியெலாம் 
ஒழுக்கு நிலா என்றாலும்; 
ஒரு நாள்தான் வாராமல் 
வழுக்கு நிலா என்றாலும்; 
வரதா! உன் வனப்பின் முன் 
இழுக்கு நிலா என்றாகி 
எழிலியிலே ஒளியாதோ?

ஆரோ!
 ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

கண்ணழகன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணனையன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணிறைந்து காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணெடுத்துக் காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்!

ஆரோ ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

ஏடு மேய்ப்பதற்கு 
எழுத்தறிவு பூத்திருக்க; 
நாடு மேய்ப்பதற்கு 
நாற்காலி காத்திருக்க; 
வீடு மேய்ப்பதற்கு 
வைகுந்தம் வாய்த்திருக்க; 
மாடு மேய்ப்பதற்கு 
மனமிரங்கி வந்தாயோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

#ஸ்ரீ கிருஷ்ண விஜயம்
#கவிஞர் வாலி


Tuesday, March 28, 2023

Grimm's #14 இரவுக்காவலன்!

 






ஒவ்வொரு ஊரிலும் மனவளர்ச்சி குன்றிய பரிதாபத்திற்குரிய மனிதர்கள் இருப்பார்கள். ஊரார் ஏவும் எளிய வேலைகளை செய்து அவர்கள் அளிக்கும் உணவை உண்டு ஜீவிக்கும் கடவுளின் கைவேலை பிசகிய மண் பாத்திரங்கள்.

ஸ்டெபனோவா நகரத்தின் பரிதாப ஆத்மாவான ஜானோஸ்  தான் சார்ந்திருந்த ஜனங்களிடம் அனுபவித்ததெல்லாம் கேலி, கிண்டலும் உடல் ரீதியான இம்சைகளையுமே.

உச்சகட்டமாக, ஜானோஸ் விபத்தால்  கால் பாதிக்கப்பட்டு  இருந்த நிலையில் அவனுடைய சகோதரனான அந்நகர மேயர் ஜானோஸுக்கு இரவுக்காவல் பணியை அளிக்கிறார். தன் கால்வலி பற்றிய ஜானோஸின் முறையீடு  கற்பாறையில் விழுந்த விதைக்கு ஒப்பாகிறது.

பின் வந்த இரவுகளில் ஸ்டெபனோவா நகர வீதிகளில் ஜானோஸ் தன் காலை இழுத்து நடக்கும் சத்தமும் அவனது நள்ளிரவு நேரம் அறிவிக்கும் குரலும் வருடங்களாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அவனது காவற்பணி நகர மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.

எந்நிகழ்விலும் சலனமின்றி தன்னோட்டத்தில் விரையும் காலம் ஒருநாள் ஜானோஸை அழைத்துக்கொண்டது. 
அவனது சகோதரனான மேயரோ ஜானோஸுக்கு தன் குடும்பக் கல்லறையில் அமைதியாகத் துயிலும் வாய்ப்பையும் அளிக்கவில்லை. ஒரு நாயினும் கேவலமாக எண்ணப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அவன் புதைக்கப்பட்டான்.

ஆனால் அன்றிரவே ஜானோஸின் ஆன்மா தன் காவற்பணியை மீண்டும் துவங்கியது.
மன அமைதி இழந்த பொது ஜனங்களின் வேண்டுகோள்கள் பயனற்றுப் போயின. 

இறுதியில் ஜானோஸின் ஆன்மாவை அமைதி கொள்ளச் செய்தது ஒரு சிறுவனின் இரக்கமான வார்த்தைகளும், சில கண்ணீர்த்துளிகளும்...










*****

Friday, January 20, 2023

17,அச்ச மாளிகை!

 





பிளெண்டிங் மாளிகையின் மர்ம நிகழ்வுகள் தொடர்கின்றன.

பீட்டர் காணாமல் போகிறான். பாதாள அறையில் புதிதாக, பீட்டரின் ஆடை அணிந்த  மண்டையோட்டு சடலம் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் அது முழு எலும்புக்கூடாக உள்ளது.

இதற்கிடையே மாளிகையில் ஒரு மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.



கறுப்பு உடை பெண்மணி மாளிகையில் இருப்பவர்களில் ஒருவர்தான் என்பது உறுதியானது.




அன்றிரவு டைலனை சந்திக்கும் பணிப்பெண் அமாபெல் டைலனிடம் கறுப்பு உடை பெண்மணி பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறி உண்மைகளை வெளியிட முயல்கிறாள்.
ஆனால் அக்கனத்திலேயே அவளது முகம் தானாக பொசுங்கி மண்டையோடாகி மாண்டு போகிறாள்.

அந்த அறையில் ஒரு இரகசியக் வழியைக் கண்டு பிடிக்கும் டைலன்,  அது ஹானரின் அறையில் முடிவதை காண்கிறார்.
அங்கே மேஜை மீது அப்போதுதான் இயங்கியதன் சூடு குறையாமல் இருக்கிறது ஒரு சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி. அதன் மூலம் சுடப்பட்ட தீப்பிடிக்கும் குண்டு பாய்ந்ததால் தான் அமாபெல்லின் தலை எரிந்து போனது என்பதை டைலன் புரிந்து கொண்டார்.



மறுநாள் இரவு ஹானர் கறுப்பு உடை பெண்மணியால் அந்தரத்தில் உயர்த்தப்பட்டு சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டதை மிஸ் மில்ட்ரெட்டும் டெஸ்மாண்டும் கண்டனர். ஆனால் பின்னர் அங்கு வரும் டைலன் ஹானர் வெடித்துச் சிதறிய அறையில் வெடிமருந்தின் நெடியை உணர்ந்தார்.




வாரிசுதாரர்களில் இதுவரை மூவர் மறைந்து விடவே, அடுத்த பலி தான்தான் என பெட்டூலியா அச்சம் கொண்டாள். இறந்து போன அமாபெல்,  வாரிசு இல்லை என்பதால் இந்தக் தொடர்கொலைகள் பட்டியலில் மாளிகையில் உள்ள யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என டைலன் தெரிவித்தார். மேலும் மாளிகையில் மிஞ்சியிருக்கும் நால்வரும் பாதுகாப்புக்காக ஒரே அறையில் தங்கியிருக்க ஏற்பாடாகியது.




சம்பவங்களின்றி இரு நாட்கள் கடந்த பின் டெஸ்மாண்ட் தன் உடல் எழும்புகள் பழையதாகி விட்டன,  என சலித்துக் கொண்டபோது,  டைலனுக்கு பாதாள அறையில் கண்ட பீட்டரின் முழுமையான எலும்புக்கூடு நினைவில் இடறுகிறது. 

மீண்டும் அந்த எலும்புக்கூட்டை ஆராயும் டைலன்,  அது ஒரு பெண்ணின் பழைய எலும்புக்கூடு என்பதை உணர்ந்தார். அது அநேகமாக நிலவறையில் மரணித்த விவியனின் எலும்புக்கூடாக இருக்கலாம்
என தீர்மானித்தனர்.

 அப்படியானால் பீட்டர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. கொலையாளி பீட்டராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.




அன்றிரவே மில்ட்ரெட்டும் பெட்டூலாவும் கொல்லப்படுகின்றனர். இறுதியாக உண்மைகளை புரிந்து கொள்ளும் டைலன் டெஸ்மாண்டிடம் பிளெண்டிங் மாளிகையின் கோரக் கொலைகளுக்கான மர்மத்தை விளக்கத் தொடங்கினார்.



கறுப்பு ஆடை அணிந்த ஆவியை பார்த்ததாக பணியாளர்கள் கூட்டாக பொய் சொல்லி இருக்கிறார்கள்.
மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவை கொன்றது அவர்களேதான். நோக்கம் : கோட்டையில் தங்கும் வாரிசுகள் பணத்தாசையால் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டால் பிளெண்டிங் மாளிகையின் சொத்துகள் பணியாளர்களைச்சேரும். 

கறுப்பு ஆவியுருவம் டைலன் முன் நேரடியாக தோன்றிய தருணங்களில் அமாபெல்லும் மில்ட்ரெட்டும் ஆவி வேஷம் போட்டுள்ளார்கள்.

இடையில் அமாபெல் பயந்து போய் டைலனிடம் உண்மைகளை வெளியிட முயன்றதால் அவளை மில்ட்ரெட் கொன்றாள்.

  மில்ட்ரெட்டை டெஸ்மாண்ட் கொன்று விடுகிறான்.


உள்ளே பூட்டப்பட்ட அறையில் நிகழும் கொலைகளின் மர்மம் : உண்மையில் கொலை நிகழ்ந்த பின் டெஸ்மாண்டால் கதவு வெளிப்பக்கத்தில் பூட்டப்படும், கதவை உடைத்து உள்ளே நுழையும் டெஸ்மாண்ட் பூட்டின் சாவியை கதவின் உள் பக்கத்தில் வைத்து விடுவான். 
பூட்டுக்கும் சாவிக்கும் புழங்கிய தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை டைலன் கவனித்தார்.



மறைந்து போகும் காலடித்தடங்கள் : அச்சுப் பிசகாமல் பின்னோக்கி நடக்கும் எளிய தந்திரம்.


டெஸ்மாண்ட் டைலனை சுட முயலும்போது டைலன் அவனை சுட்டு வீழ்த்துகிறார்.


இறுதியில் மற்றவர்கள் மரணிக்கும் வரை  இறந்து விட்டதாக நாடகமாடி மறைந்திருந்த பீட்டர் வெளிப்படுகிறான். சொத்துக்கள் அவனை அடைகிறது.




ஆனால் அவனும் தப்ப முடியவில்லை மரணத்திடமிருந்து...



அழகுப் புயல் பெட்டூலாவின் மரணம் அவளது இரசிகர்களை கலங்கச் செய்வது நிச்சயம். 








Tuesday, January 17, 2023

16,ஆவியின் சாபம்!

 


19ம் நூற்றாண்டில் குரூர நெஞ்சமும் மாந்திரீகத்தில் ஈடுபாடும் கொண்ட முதலாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு, விவியன் என்ற அழகியை வசியம் செய்து திருமணம் செய்து கொண்டார்.




ஆனால் வசியத்தின் விளைவு மறைந்தபோது, தனது கணவன் 
மற்றவர்களை துன்புறுத்தி மகிழும் ஒரு சாடிஸ்ட் என்பதை விவியானா அறிந்து கொண்டாள்.



விவியானா ஒரு தீக்கனவில் வீழ்ந்து விட்டாள், அதில் இருந்து மீள வழியற்றுப் போனது.




அப்போதிலிருந்து அவள் முழு கறுப்பு உடையில், தன்னை  மறைத்துக் கொண்டாள். அவளது தோற்றம் ஒரு கறுப்பு ஆவியைப் போன்றிருந்தது.

அவளுடைய ஒரே பொழுதுபோக்கு குதிரையில் சவாரி செய்வதுதான்.


குதிரை சவாரிக்கு சென்று வந்த ஒருநாளில் அவளுடைய இளமையின் வேகம் குதிரையை பராமரிக்கும் இளைஞனுடன் காமத்தை கட்டவிழ்க்கச் செய்தது.

அந்த துரோகத்தை கண்ணுற்ற பிளெண்டிங் பிரபு,  இளைஞனை கொன்று விட்டு விவியனை பாதாள அறையில் கட்டிப்போட்டு விட்டுச் சொன்னார்: 

"நீ அழகாக இருக்கிறாய் விவியானா!  மிக அழகு!  உன் அழகுக்கு நீ தகுதியற்றவள்."

இவ்வாறு சொல்லியவாறு,  பிளெண்டிங் பிரபு விவியானாவின் முகத்தின் மீது கொதிக்கும் உலோகத்தை ஊற்றினார்.


முகம் பொசுங்கி உயிருடன்  துடிதுடித்து மாண்ட அப்பெண்மணி மறுகணமே பேயாக எழுந்து பிளெண்டிங் பிரபுவை சபித்தாள்.

  "உனக்கும் உன் சந்ததிக்கும் இனி நானே மரணமாக இருப்பேன்"  என சாபமிட்டாள்.




அந்நிகழ்வுக்குப் பின் ஒரு இரவு, பிளெண்டிங் பிரபு பாதாள அறையில் தனது மாந்திரீக சோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டு​​​​அவரது முகம் முற்றிலும் எரிந்து போய் அவருக்கு மரணம் சம்பவித்தது.  விவியனின் மரணத்தை ஒத்த மரணம்.



அவரது வாரிசான இரண்டாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனார். அவரருகில் கறுப்பு உடை அணிந்த ஒரு பெண்மணி குதிரையில் செல்வதை சிலர் பார்த்தனர். 



இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்: அநேகமாக குதிரையிலிருந்து விழுந்திருக்கலாம்... ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவரது உடல் முழுதாக இருந்தது. ஆனால் தலை மட்டும் வெறும் மண்டையோடாக மாறியிருந்தது.


1988 ஜனவரியின் ஒர் நள்ளிரவில் தனது மூதாதையரைப் போன்றே குரூர மனம் படைத்த மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவின் அறையிலிருந்து பயங்கர அலறல் சத்தம்  எழுந்தது.

மாளிகையின் பணியாளர்களான மிஸ் மில்ட்ரெட், அமாபெல், டெஸ்மாண்ட் ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது,  பிரபுவின்  அறையிலிருந்து ஒரு கறுப்பு உடை அனிந்த பெண்மணியின் ஆவியுருவம் வெளியேறி சென்றதைக் கண்டனர்.

பிளெண்டிங் பிரபுவின் அறைக்கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் டெஸ்மாண்ட் மூலம் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.




அங்கே தனது இருக்கையில் மண்டைத் தோல் உரிக்கப்பட்ட நிலையில் பிளெண்டிங் பிரபு கோரமான மரணத்தை சந்தித்திருந்தார். 

அந்த அறையில் பிரபுவின் மண்டைத் தோலை உரித்த ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. மேலும் உள்ளே பூட்டப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து எவரும் வெளியேறுவதற்கான வழியும் காணப்படவில்லை.


பின்னர், முறையாக பராமரிக்கப்படாமல் காலத்தால் சிதிலமடைந்திருந்த பிளெண்டிங்ஸ் மாளிகையில், சந்ததி இன்றி மாண்ட மூன்றாம்  பிளெண்டிங் பிரபுவின் உயில் வாசிக்கப்பட்டது.




உயிலில் தன் உறவினர்களான, 

ஹானர் (அமெரிக்கா)
லோகன் (இலண்டன்)
பெட்டூலா (இலண்டன்)
பீட்டர் (ஸ்காட்லாண்டு)

 ஆகிய நால்வரும் ஏழு நாட்கள் பிளெண்டிங் மாளிகையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் இறுதியில் உயிருடன் பிழைத்திருப்பவர்களுக்கு இருபத்திரண்டு மில்லியன் பவுண்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இலண்டனில் டைலன்டாக்கை சந்திக்கும் 
பிளெண்டிங்கின் மருமகள் பெட்டூலா, அந்த அச்ச மாளிகையில் தான்  தங்கும்போது துணைக்காக டைலன் டாக்கை தன்னுடன் வரக் கோருகிறாள்.
.


அன்றைய இரவே பிளெண்டிங் மாளிகையின் பணிப்பெண் அமாபெல் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் ஆவியுருவை கண்டாள்.

ஆவி தோன்றிய இடத்தில் காணப்பட்ட காலடித்தடங்களை தொடரும் டைலன்டாக்,  தடங்கள் வெளி செல்ல வழியற்ற ஓர் அறையில் மறைந்து விடுவதைக் கண்டார்.




மறுநாள் காலை உணவுக்கு வாரிசுதாரர்களில் ஒருவரான லோகன் வரவில்லை. அப்போது மாளிகையின் நிர்வாகியான மிஸ் மில்ட்ரெட்,  கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் கைகளில் லோகன் இருப்பதையும் அவனது தலை வெடித்துச் சிதறுவதையும்  கண்டு அலறினார்.

மற்றவர்கள் வந்து பார்த்தபோது லோகனின் அறை உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த அறை வெறுமையாக இருந்தது. லோகன் பூட்டிய அறையில் இருந்து மாயமாக மறைந்து போயிருந்தார்.




டைலன்டாக்கும் மாளிகையின் பணியாளர் டெஸ்மாண்டும் லோகனை தேடி பிளெண்டிங் மாளிகையின் பாழடைந்த அறைகளில் சுற்றி வந்தனர்.

அப்போது மாளிகையின்  வெளியே பனியில் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் தோன்றியது.



ஹானர் அந்த உருவத்தை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டாள். ஆனால் அந்த உருவம் திடீரென்று மறைந்து விடுகிறது. 




அந்த உருவம் முன்பக்கத்தில் கறுப்பு நிறமும், பின்பக்கத்தில் வெண்மை நிறமும் கொண்ட ஆடை அணிந்திருக்கலாம்,  துப்பாக்கிச் சூடு நடந்த உடன் தரையில் குப்புறப் படுத்து ஊர்ந்து சென்றிருக்க வேண்டும், அடர்த்தியாகப் பெய்து கொண்டிருந்த பனி  காரணமாக அது சட்டென்று மறைந்து விட்ட தோற்றத்தை அளித்திருக்க வேண்டும். என்று டைலன்டாக் அந் நிகழ்வின் மர்மத்தை ஊகித்தார்.

மறுநாள் தற்செயலாக முதலாம் பிளெண்டிங் பிரபு விவியனை வதைத்துக் கொன்ற பாதாள அறையை கண்டு பிடித்தனர். 



அதனுள்ளிருந்த மேடையில் காணாமல் போன லோகன் தலை மட்டும் மண்டையோடாகி விட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
 

 அப்போது மாளிகையின்  வெளியே கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் குதிரை மீது தோன்றியது.



முதல் பாகம் முற்றும்...

முதல் பாகத்தின் மர்மங்களிற்கான விளக்கங்கள் நிறைந்த இரண்டாம் பாகம் விரைவில்... 






Sunday, January 8, 2023

14,மரணத்தின் வாசலில்...

 



Dylan dog 14
வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையில்
பக்கங்கள்: 96

பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: மிக்னாக்கோ லூய்கி
வரைபடங்கள்: பிக்காட்டோ லூய்கி
கவர்: வில்லா கிளாடியோ

ஜில் பிராடியின் தந்தை இறந்துவிட்டார். சாதாரண அறுவை சிகிச்சையில் கணிக்க முடியாத  மரணம். நிச்சயமாக அது நடக்கலாம், ஆனால் ஜில் நம்பவில்லை. பொது மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏதோ ஒன்று நகர்கிறது, பல சந்தேகத்திற்கிடமான மரணங்கள்.  அங்கே ஒரு நம்பமுடியாத பயங்கரம் இருப்பதை டைலன்டாக்
உணர்கிறார். இந்த பயங்கரத்தின் பின்னணியில் இருப்பது யார்? 

(புத்தக நிறுவனத்தின் அறிமுக உரை)


இலண்டன் தலைமை மருத்துவமனையில் நடைபெறும்  அறுவை சிகிச்சைகள் மரணத்தில் முடிகின்றன.

அங்கு மருத்துவ மாணவியாக பயிற்சி பெறும் ஜில்லின் தந்தையும் அறுவை சிகிச்சையின்போது பலியாகிறார்.

ஆனால் ஜீவனத்துக்கும் மரணத்துக்கும் இடையே இருந்த சில நிமிடங்களில் ஜில்லை சந்தித்து அறுவை சிகிச்சையில் மர்மம் இருப்பதாக எச்சரித்துச் செல்கிறார்.

டைலனின் உதவியை நாடுகிறாள் ஜில். விசாரணையின் முடிவில் அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு  மயக்க மருந்து கொடுக்கும்  வால்கர் நோயாளிகளை கொன்று புதிய அரக்க உயிர் ஒன்றை உருவக்கியுள்ளதை கண்டறிந்தனர்.

வால்கரும் அரக்கனும் டைலனால் அழிக்கப்பட்டனர். ஆனால் தலைமை மருத்துவரும் வால்கரை போன்றே மற்றொரு அரக்கனை  உருவாக்கியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டைலனுக்கு கிரவுச்சோ இறந்தவர்களுக்கு வைக்கும் மலர்களை கொண்டு வந்து தரும் இடம் செம காமெடி.😂



Tuesday, January 3, 2023

13,இரத்தத் தாகம்.

 



Dylan Dog 13 

அவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் 
வெளியிடப்பட்டது : 1/10/1987
பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: ஃபெராண்டினோ கியூசெப்
வரைபடங்கள்: டிரிகோ குஸ்டாவோ
கவர்: வில்லா கிளாடியோ
கதைக்களம்: Tiziano Sclavi
திரைக்கதை: Giuseppe Ferrandino
கலைப்படைப்பு: Gustavo Trigo
Cover: Claudio Villa

 இரத்தக்காட்டேரி உங்கள் அருகில்  இருக்கக்கூடும். நீங்கள் நினைப்பதை விட மிக அருகிலேயே இருக்கக்கூடும். அது ஒரு நண்பனாக, உறவினனாக, உங்கள் மனைவியாக கூட இருக்கலாம்! டைலனுக்கு இது தெரியும், காட்டேரி தனியானது இல்லை என்பது அவருக்குத் தெரியும்.  பல காட்டேரிகள் மனித முகமூடியின் கீழ் மறைந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அரக்கர்கள். இரவின் தனிமையில் இரத்த தாகத்தில் துடிக்கும் ஒரு பயங்கரமான இருண்ட படைப்பு அவர்களுடையது என்பதையும் அவன் அறிவான்! 

(புத்தக நிறுவனத்தின் அறிமுக உரை) 

இரத்தக்காட்டேரிகளின் சொர்க்க பூமியான டிரான்ஸில்வேனியாவுக்குச் சென்று வந்த பின் இரத்தக்காட்டேரியான  தன் மனைவி சின்டியின் மீதான அன்பால் அவளது இரத்தத் தாகத்தைத் தணிக்க சிலரைக் கொன்று, இரத்தத்தை எடுத்து அவளுக்குக் கொடுக்கிறார் ராபின். 

தான் ஒரு இரத்தக்காட்டேரி என்பதை உணராமல் தன் கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு டைலனிடம் உதவி கோருகிறாள் சின்டி.

தன்னை விசாரிக்க வரும் டைலனிடம் மனைவியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் தன்னையே இரத்தக்காட்டேரி என ஒப்புக்கொண்டு, தற்கொலை செய்து கொள்கிறார் ராபின்.

ராபினின் மரணத்துக்குப் பின் தனக்கு எடுக்கும் இரத்தத் தாகத்தின் மூலமாக உண்மையை உணரும் சின்டி, ராபினின் கல்லறையில் வருந்தி நிற்கிறாள்.

இதற்கிடையே ராபின், சின்டி தம்பதியின் மகளான கரோல் டைலனை சந்தித்து தன் தாயின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுவதாக தெரிவிக்கிறாள்.

தன்னை விசாரிக்க வரும் டைலனின் முன் காட்டேரியாக மாறும் சின்டி டைலனை கொல்ல முயல்கிறாள். அவளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அவளை கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார் டைலன்.

இறுதியில் கரோலும் ஒரு இரத்தக்காட்டேரி தான் என்றும் காட்டேரிகள் நம்முடன் கலந்து வாழ்கிறார்கள் என்றும் கதை முடிகிறது.

ராபினின் உதவியாளராக வரும் வேரா ஃபாரெட் எனும் கவர்ச்சி மிகு இரத்தக்காட்டேரி டைலனை வீழ்த்த முயன்று மாண்டு போனாலும், தன் அழகால் இரசிகர்களை கிறங்கச் செய்யப் போவது நிச்சயம்.

உண்மையில் இரத்தக் காட்டேரிகள் நம்முடன்தான் வாழ்கின்றனர். பொதுமக்களின் இரத்தத்தை உரிஞ்சும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், சுயநலவாதிகளும் இரத்த வெறி பிடித்த காட்டேரிகளே.